கும்பகோணம் காவல் நிலையங்களில் உடற்பயிற்சி கூடங்களை திறந்து வைத்தார் ஐஜி பாலகிருஷ்ணன்

கும்பகோணம் காவல் நிலையங்களில் உடற்பயிற்சி கூடங்களை ஐஜி பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.;

Update: 2022-05-14 06:15 GMT

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் போலீசாருக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் திறந்து வைத்து, உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களை பார்வையிட்டார். பின்னர் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கும்பகோணம் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. சாரங்கபாணி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாரங்கபாணி கோவில் தேர் திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீசாரின் பயன்பாட்டுக்காக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி கூடத்தில் ஆண் மற்றும் பெண் போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரங்களில் உடற்பயிற்சி செய்து தங்களது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் நகரில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் செயல்படாமல் இருக்கும் போக்குவரத்து சிக்னல்களை மாநகராட்சியுடன் இணைந்து சீர் செய்ய திட்டமிட்டுள்ளோம். கும்பகோணம் மேற்கு-கிழக்கு போலீஸ் நிலையங்கனின் எல்லை பிரச்சினை குறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய தீர்வு காணப்படும். பொதுமக்கள், எந்த போலீஸ் நிலையங்களில் வேண்டுமானாலும் தங்களது புகார்களை கொடுக்கலாம் என்று கூறினார்.

Tags:    

Similar News