கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக 100க்கும் மேற்பட்ட மாடுகள் கேட்பாரற்று சாலையில் சுற்றித் திரிந்தன. இந்த மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு சிரமங்கள் அளித்ததோடு, சுமார் 20க்கும் மேற்பட்ட விபத்துகளை ஏற்படுத்தி 25 பேர் வரை காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர்.
மாடுகள் ஏற்படுத்திய விபத்தின் காரணமாக இதுவரை பலத்த காயமடைந்த 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த மாடுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, தஞ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி, கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த பசு மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், நகர் நல அதிகாரி பிரேமா, கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மற்றும் வருவாய் அதிகாரிகள் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் 31 மாடுகளை பிடித்தனர். பின்னர் அந்த மாடுகள் அனைத்தும் லாரிகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டம், வானாதிராஜபுரத்தில் உள்ள தனியார் கோசாலையில் கொண்டு விடப்பட்டன. கும்பகோணத்தில் நள்ளிரவில் அதிரடியாக மாடுகளை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.