நிதிநிறுவன மோசடி: ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வீட்டில் 12 சொகுசு கார்கள் பறிமுதல்
கும்பகோணத்தில் நிதிநிறுவன அதிபர்கள் வீட்டில் இருந்து 12 சொகுசு கார்களை எஸ்பி தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
கும்பகோணத்தில் நிதிநிறுவன அதிபர்கள் வீட்டில் இருந்து 12 சொகுசு கார்களை எஸ்பி தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள்.இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்தனர். ஆனால் திரும்ப தரவில்லை என்பதால், பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஏராளமானோர் புகார் அளிக்த்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் மற்றும் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ரகுநாதன், மீரா, ஸ்ரீதர் ஆகியோர் மீதும் 120 பி, 406, 420 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் நிதி நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன் தலைமையில் எஸ்பி தனிப்படை பிரிவு சப்இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான, போலீசார் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வீட்டில் இருந்த 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.