பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கத்தை கும்பகோணம் கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஒப்படைத்தனர்.;
தஞ்சை அருளானந்த நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் இயக்குனர் ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில் ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் வழிகாட்டுதலின்படி தனிப்படையினர் சில நாட்களுக்கு முன்பு தஞ்சைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், தஞ்சை அருளானந்த நகர் பகுதியில் உள்ள சாமியப்பன் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த சாமியப்பன் மகன் அருணபாஸ்கரிடம் தொன்மையான கோவில் சிலைகள் ஏதேனும் உள்ளதா? என விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர், தனது தந்தை சாமியப்பன் வசம் தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதை தற்சமயம் வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அந்த பச்சை மரகத லிங்கத்தை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட மரதக லிங்கம் பல கோடி ரூபாய் மதிப்பிலானது ஆகும்.
இந்நிலையில் மீட்கப்பட்ட மரகதலிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், அசோக் நடராஜன் உள்ளிட்டோர் அடங்கிய போலீஸ் குழுவினர் நேற்று மாலை சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் கும்பகோணம் கோர்ட்டில் கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் ஒப்படைத்தனர்.
சிலையை ஆய்வு செய்த நீதிபதி சண்முகப்பிரியா, போலீசார் கொடுத்த தகவலின்படி சிலை குறித்த விவரங்களை சரிபார்த்து மரகதலிங்கத்தை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் செயல்பட்டு வரும் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உள்ளிட்ட போலீசார் நேரடியாக உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு மரகதலிங்கத்தை எடுத்துச்சென்று பாதுகாப்பாக வைத்தனர். அப்போது நீதிபதி சண்முகப்பிரியாவும் பாதுகாப்பு மையத்திற்கு வந்து மரகதலிங்கம் வைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.