கும்பகோணத்தில் காதல் திருமணம் செய்த டிரைவர் மர்ம மரணம்
கும்பகோணத்தில் காதல் திருமணம் செய்த டிரைவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சாக்கோட்டை மெயின் சாலையில் வசித்தவர் மோகன்தாஸ் (31) கார் டிரைவர். இவரது மனைவி சுந்தரி (30). ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இதனால் இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இருவரும் தனியே வாடகை வீட்டில் வசித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சுந்தரி, கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது மோகன்தாஸ் உடலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த சுந்தரி அலறிக் கொண்டே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார்.
இதனிடையே, தகவலறிந்த பட்டீஸ்வரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மோகன்தாசின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். மர்மமான முறையில் மோகன்தாஸ் இறந்தது குறித்து போலீசார் கொலையா, தற்கொலையா என விசாரிக்கின்றனர்.