கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்திற்குள் நுழைந்து மணமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சாக்கோட்டை அன்பழகன் தங்கள் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று கும்பகோணம் அருகே அம்மாச்சத்திரம், கொரநாட்டு கருப்பூர், கள்ளப்புளியூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவின் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
பங்குனி மாதம் முதல் முகூர்த்தம் என்பதால் அப்பகுதிகளில் ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது அங்கு தனது கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சாக்கோட்டை அன்பழகன் திருமண நடைபெற்ற மண்டபங்களுக்குள் நுழைந்து மணமக்கள் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.