கும்பகோணம் மாநகராட்சியில் 41 இடங்களில் திமுக, அதிமுக நேரடி போட்டி
கும்பகோணம் மாநகராட்சியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 41 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றன.;
தமிழகத்தில் வருகிற 19ந் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் என 2 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் மாவட்டத்தில் உள்ள 2 மாநகராட்சி, 2 நகராட்சி, 20 பேரூராட்சிகளிலும் சேர்த்து மொத்தமுள்ள 459 வார்டுகளில் 2 வார்டில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 457 வார்டுகளில் 2038 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கும்பகோணம் மாநகராட்சியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதியதாக உதயமானது. இதனால் முதல் முதலாக கும்பகோணம் மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 275 பேர் களத்தில் உள்ளனர். இதில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 41 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றன.
அதன் விவரம் வருமாறு:- வார்டு 1 முதல் 3, வார்டு 5,6, வார்டு 8 முதல் 13, வார்டு 15, 16, வார்டு 18 முதல் 23, வார்டு 25 முதல் 33, வார்டு 36 முதல் 48 வரை என 41 வார்டுகளில் நேரடியாக தி.மு.க.& அ.தி.மு.க. போட்டியை சந்திக்கிறது. மற்ற 7 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. 48 வார்டுகளிலும் போட்டியிடுகிறது.