மகாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் : குடந்தையில் வரவேற்பு
ரசாயன உரங்கள் இன்றி இயற்கை விவசாயம் செய்து மண்வளத்தை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இப்பயணம் நடைபெறுகிறது;
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கடந்த 19ம் தேதி மண் வளம் காக்க தொடங்கிய சைக்கிள் யாத்திரை குடந்தை வந்தது. சைக்கிள் யாத்திரை வந்தவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவித்து குடந்தை ஈஷா யோகா பவுண்டேஷன் சார்பில் ரவி, சங்கர், செந்தில், ராஜா, பில் கெனான் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
இந்த விழிப்புணர்வு யாத்திரை குறித்து அவர்கள் கூறுகையில், ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையில் விவசாயம் செய்து மண் வளத்தை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக மகாராஷ்டிரா உதய்கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை இந்த ரத யாத்திரை மேற்கொண்டுள்ளோம். தினமும் சராசரியாக 130 கிலோமீட்டர் என்ற அளவில் மொத்தம் சுமார் 1600 கிலோ மீட்டர் சைக்கிளில் 20 பேர் கொண்ட குழுவினர் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளோம்.
ஆந்திரா, திருப்பதி சென்று அங்கிருந்து குடந்தை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு வரும் 2ம் தேதி செல்ல திட்டமிட்டுள்ளோம். ஈஷா பவுண்டேஷன் இந்த விழிப்புணர்வு பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது என்றனர்.