கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள வண்டிகளை அனுமதிக்காவிட்டால் தொடர் போராட்டம்
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்
கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியில் மீண்டும் மணல் அள்ள அனுமதி வழங்க வலியுறுத்தி மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுந்தரபெருமாள்கோயில், திருவலஞ்சுழி, ஆரியப்படையூர், சேஷம்பாடி, பட்டீஸ்வரம், திப்பிராஜபுரம், கொற்கை, சாக்கோட்டை, மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட மணல் அள்ளும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
கொத்தங்குடி பகுதியில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியில் இருந்து மணல் அள்ளி விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் கரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கொத்தங்குடி பகுதியில் அமைந்துள்ள மணல் குவாரியை அதிகாரிகள் மூடியதால் இந்தப் பகுதியில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக இந்த மணல் குவாரியில் இருந்து மணல் அள்ளி பிழைப்பு நடத்திவந்த 600க்கும் மேற்பட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து குடும்பத்தினருடன் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கொத்தங்குடி பகுதியில் அமைந்துள்ள மணல் குவாரியை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இவர்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க தலைவர் கலியமூர்த்தி, செயலாளர் முருகேசன், பொருளாளர் முருகன் உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கடைத்தெரு பகுதியில் திரண்டு, கொத்தங்குடி பகுதியில் அமைந்துள்ள மணல் குவாரியை மீண்டும் திறக்க அதிகாரிகளை வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மணல் குவாரியை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு பிறகு மணல் குவாரியை திறக்காவிட்டால், மீண்டும் தொடர் போராட்டம் செய்யப்படும் என மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.