காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.15½ கோடியில் பாலம் கட்டுமான பணி துவக்கம்
கும்பகோணத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.15½ கோடியில் நீரொழுங்கியுடன் கூடிய பாலம் கட்டும் பணி இன்று தொடங்கியது.;
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே நீரொழுங்கியுடன் கூடிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த நீரொழுங்கியுடன் கூடிய பாலம் அமைக்கப்பட்டால், தேப்பெருமாநல்லூர், திருபுவனம், அசூர், பெரும்பாண்டி மற்றும் உள்ளூர் 3 வாய்க்கால் மூலம் 4,200 ஏக்கர் நிலங்கள் எளிதாக பாசன வசதி பெறும். நகரில் உள்ள ரெட்டிராயர் குளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட குளங்களில் எளிதாக நீர் நிரம்ப வசதி ஏற்படும்.
இந்த நிலையில் நீரொழுங்கியுடன் கூடிய புதிய பாலம் கட்ட கடந்த 2016-ம் ஆண்டு ரூ.9 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தினை மறுமதிப்பீடு செய்து ரூ.15 கோடியே 67 லட்சத்து 15 ஆயிரத்தில், 200 அடி நீளத்திற்கு 15 அடி அகலத்தில், 15 கதவணைகளுடன் பாலம் கட்டப்பட உள்ளது. ஒவ்வொரு கதவணையும் 10 அடி அகலம், 7 அடி உயரத்தில் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது.
நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பாலம் கட்டும் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் தமிழழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.