இருளர் இன மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார்

கும்பகோணம் அருகே தேனாம்படுகை கிராம இருளர் இன மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்;

Update: 2022-04-02 05:30 GMT

தேனாம்படுகை கிராம இருளர் இன மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள தேனாம்படுகை கிராமம் மண்டக்கமேடு புதுத்தெரு பகுதியில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில் இருளர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இதில் சில மாணவ, மாணவிகள் தொடக்க கல்வி முடித்துள்ள நிலையில், தங்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் தங்களது பள்ளி படிப்பை தொடர முடியவில்லை என கூறியிருந்தனர்.

இதுகுறித்த தகவல் பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக பழங்குடியின மாணவ, மாணவிகள் 16 பேருக்கு சாதி சான்றிதழ் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில் பழங்குடியின மாணவ, மாணவிகள் வசித்து வரும் மண்டக்கமேடு பகுதிக்கு நேரில் சென்ற கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியை பார்வையிட்டார்.

பின்னர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 16 பேருக்கு சாதி சான்றிதழை நேரடியாக அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கினார். மேலும் அவர்களது படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

சாதி சான்றிதழ் கேட்டு தாங்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தும் வழக்கம்போல் கிடப்பில் போடப்படும் என்று நினைத்து இருந்த இருளர் இன மாணவ-மாணவிகள், தங்களது கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுத்ததுடன் அதை நேரடியாக தங்களது வீட்டுக்கே வந்து கொடுத்த கலெக்டரின் நடவடிக்கையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினர் வீட்டுக்கும் நேரில் சென்று அவர்களிடம் நலம் விசாரித்து அந்த குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அவர்களது வீட்டு வாசலிலேயே சான்றிதழ் கலெக்டர் வழங்கியபோது, சாதி சான்றிதழை பெற்றுக்காண்ட மாணவ-மாணவிகளும் அவர்களது பெற்றோரும் உணர்ச்சிப்பெருக்கால் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

Tags:    

Similar News