அரசு உத்தரவின்படி கும்பகோணம் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்கள் அடைப்பு
கொரோனாவை கட்டுப்படுத்த அரசு உத்தரவின்படி கும்பகோணம் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்கள் அடைக்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கடைநேரம் குறைப்பு உள்ளிட்டவை நேற்றுமுன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுமுறை நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கோவிலில் வழக்கம்போல் நடைபெறக்கூடிய பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற்றன. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பலர் கோவிலுக்கு வந்தனர். ஆனால் உள்ளே செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், கோவிலுக்கு வெளியே நின்று கோபுர தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
இதேபோல் கும்பகோணத்தைச் சுற்றி உள்ள ஆதிகும்பேசுவரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், நாகேஸ்வரன் கோவில், உப்பிலியப்பன் கோவில், வலங்கைமான் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், ராகு ஸ்தலம், சூரியனார் கோயில், சுக்கிரன் கோவில் ஆலங்குடி குரு ஸ்தலம், கதிராமங்கலம் வனதுர்க்கை ஆலயம், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி நெய்தீபங்களையும் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.