கும்பகோணம் வந்த காவிரி: விஜயேந்திர மடத்தின் சார்பில் மலர் தூவி சிறப்பு தீபாராதனை

கும்பகோணத்தில் காவிரியில் தண்ணீர் வந்ததையொட்டி விஜயேந்திர மடத்திலிருந்து மலர் தூவி அபிஷேகம் செய்து வரவேற்பு

Update: 2022-06-01 06:00 GMT

கும்பகோணத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம்போல் ஜூன் 12ம் தேதியோ அல்லது அதன் பிறகோ தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து கடந்த 24-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வந்தடைந்த நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரி, கல்லணை கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று விஜயேந்திர படித்துறையிலிருந்து விஜயேந்திர ராகவேந்திரா மடத்திலிருந்து காவிரியில் தண்ணீர் வந்ததையடுத்து காவிரித் தாய்க்கு நன்றி தெரிவித்து மலர்தூவி அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Similar News