கும்பகோணம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
கும்பகோணம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் டாக்டர் பெசன்ட் ரோடு பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் வாடிக்கையாளர் சேவை மையம் தனி அறையில் செயல்பட்டு வருகிறது. இந்த வாடிக்கையாளர் சேவை மையத்தில் 3 பெண் ஊழியர்கள் மற்றும் 2 ஆண்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் மதிய உணவு இடைவேளைக்காக சேவை மைய அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து பெண் ஊழியர்கள் திரும்பி வந்து கதவைத் திறந்த போது அறையில் இருந்த மேசையில் சுமார் 8 அடி நீளம் உள்ள சாரை பாம்பு நெளிந்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
பெண் ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் அங்கு வந்து பார்த்த போது அறையில் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே புகுந்த பாம்பு அறையிலிருந்து வெளியே செல்ல முடியாமல் அங்கும் இங்கும் ஊர்ந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர் அறை கதவை மூடிவிட்டு பாம்பு பிடிக்கும் நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர்கள் அறையில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பாம்பு நுழைந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.