ஆடுதுறை விஸ்வநாதர் கோயிலில் பாலஸ்தாபனம் : யாக பூஜைகள்
யாகசாலை பூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றார்
ஆடுதுறை மருத்துவகுடியில் தொண்மையான வரலாற்று சிறப்புமிக்க காசி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் பாலாலயம் மற்றும் யாகபூஜை நடைபெற்றது.
சென்ற 1938ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடந்த பிறகு கோயிலில் தொடர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ளப் படவில்லை. இதனால் கோயிலில் சுவாமி, அம்பாள் விமானம், முன் மண்டபம் மற்றும் காம்பவுண்டு சுவர் உள்ளிட்டவைகளில் செடிகள் வளர்ந்து சிதிலமடைந்தது. இக்கோயிலில் மீண்டும் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 84 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலில் ஐதீக முறைப்படி பாலஸ்தாபனம் நிகழ்ச்சி இரண்டு கால யாகபூஜையுடன் நடந்தது. பூஜைகளை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், இளவரசு ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர். 108 மூலிகைகள், நவதானியங்கள், 12 விதமான பழங்கள் கொண்டு சிவஞானசம்பந்த சிவாச்சாரியார் தலைமையில் கோயில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் யாக பூஜைகளை செய்தனர்.
தொடர்ந்து நேற்று காலை நடந்த 2ம் கால யாகசாலை பூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் ரமணி அண்ணா, கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், கிராம நாட்டாமைகள் ஸ்டாலின், இளங்கோவன், ரவி, ராஜகோபால், பாலகிருஷ்ணன், ராஜாங்கம், ராமன், அசோக்குமார், அண்ணாதுரை, ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.