ஆடுதுறை பேரூராட்சிக்கு புதிய தேர்தல் அலுவலர் நியமனம்

ஆடுதுறை பேரூராட்சிக்கு புதிய தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-03-18 11:30 GMT

ஆடுதுறை புதிய தேர்தல் அலுவலர் ராஜா.

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் கடந்த 4ம் தேதி காலை நடந்தபோது திமுக கவுன்சிலர்கள் 3 பேர் வரவில்லை. 12 பேர் மட்டும் வந்திருந்தனர். தலைவர் தேர்தலுக்கான ஆவணங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசனிடமிருந்து பறித்து திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் 4 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தலை பாதுகாப்பாக நடத்த வலியுறுத்தி பாமக, அதிமுக, சுயேட்சை கவுன்சிலர்கள் 8 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக விசாரித்த சென்னை ஐகோர்ட் கடந்த 4ம் தேதி ஆடுதுறை பேரூராட்சியில் நடந்த சிசிடிவி பதிவுகளை பார்த்து வேதனை அளிப்பதாக கூறினர். இந்நிலையில் ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசன் வரும் 23ம் தேதி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என 15 கவுன்சிலர்களுக்கும் கடந்த 15ம் தேதி இரவு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த இளவரசனை விடுவித்து புதிய தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்படுவதாகவும், வரும் 23ம் தேதி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் உரிய பாதுகாப்புடன் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது போல்  ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்த ஏதுவாக அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தேர்தல் நடத்தும் அலுவலராக பொறுப்பேற்றார். வரும் 23ம் தேதி தேர்தல் நடக்க இருப்பதால் தஞ்சை எஸ்.பி. வழிகாட்டலுடன் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் மீண்டும் நடப்பதால் அரசியல் கட்சி மற்றும் கவுன்சிலர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News