அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும்:ஏஐடியூசி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களை துவக்க வேண்டும்
சட்டமன்ற கூட்டத் தொடரில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் கொடியேற்று விழா, சங்க பலகை திறப்பு விழா நடைபெற்றது. சங்க பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி தலைமையில் நடை பெற்றது. ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை முன்னிலை வகித்தார்.
ஏஐடியூசி கொடியினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி ஏற்றி வைத்தார்.ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம் சங்க பலகையை திறந்து வைத்தார்.
இதில், தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம் உடனடியாக பேசி சம்பள உயர்வு ஏற்படுத்த வேண்டும், நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 20 20 மே மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை தொகை உள்ளிட்ட பணப்பலன்களை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும்.
இறந்துவிட்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு குடும்ப நல பாதுகாப்பு நிதி உடனடியாக வழங்கப்பட வேண்டும் , அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறையை சரி செய்ய நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தனியாக நிதியினை அறிவிக்கவேண்டும்.
போக்குவரத்து கழகங்களின் வருவாயை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கு தரமான குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் வழங்கிடவும், வேலை வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களை உடனடியாக துவக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி உயர்வை அறிவித்து ஓய்வூதியத்துடன் இணைத்து ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் ,கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்க வேண்டும். ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
இதில், அரசு போக்குவரத்து ஏஐடியூசி சம்மேளன துணை தலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் சங்க கவுரவத் தலைவர் கே.சுந்தரபாண்டியன், தலைவர் ஜி. சண்முகம், ஏஐடியூசி மாவட்ட நிர்வாகிகள் ஆர்.மதியழகன், ஜி.மணி மூர்தி , சங்க நிர்வாகிகள் எம்.மாணிக்கம், ஏ.சுப்பிரமணியன், டி. சந்திரன் , சி.ராஜமன்னார், ஆர்.ரங்கதுரை , டிசெந்தில் ,ஏ.இருதயராஜ் டி.ரெஜினால்டு ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.முடிவில் பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.