டெல்டா விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் வழங்க கோரிக்கை
டெல்டா விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உழவர் பேரியக்கம் கோரிக்கை;
தமிழ்நாடு உழவர் பேரியக்கம், மாநில தலைவர், கோ.ஆலயமணி விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக முதல்வர் ஜூலை 12 ம்தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். அந்த நீர் கல்லணையை அடைந்து அமைச்சர்களும் கல்லணையை திறந்துள்ளனர். காவேரி மற்றும் உபநதிகளில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீப காலமாக கொரோனா தொற்றால் உலகளவில் பொதுமக்கள்,வியாபாரிகள், உழவர்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வேளையில் குறுவை சாகுபடி துவங்கவுள்ளதால் விவசாயிகள் சாகுபடி துவங்க பொருளாதார அடிப்படையில் கஷ்டத்தில் உள்ளனர். புதிய அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் புதிதாக உறுப்பினர் சேர்த்து குறுவைக்கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் வழங்குவதில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விண்ணப்பம் கொடுத்துவருகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஜீவாதார தொழிலான விவசாயத்தை ஊக்கப்படுத்தி மக்களை வாழவைக்கவேண்டிய அரசு, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டால் எப்படி விவசாயம் மேன்மை அடையும்.
எனவே தமிழக அரசு பாரபட்சம் பார்க்காமல் விவசாயிகளை புதிய உறுப்பினர்களாக சேர்த்து, அனைவருக்கும் விவசாய கடன் வழங்க வேண்டும். இல்லையேல் கும்பகோணம் கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு உழவர் பேரியக்கம், மாநில தலைவர், கோ.ஆலயமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.