பள்ளி நேரங்களில் கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க ஆட்சியருக்கு கோரிக்கை
பள்ளி நேரங்களில் கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நுகர்வோர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.;
தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்க்கு கபிஸ்தலம் மற்றும் சுவாமிமலை பகுதியில் வசிக்கும் நுகர்வோர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கும்பகோணத்திலிருந்து மேலக்காவேரி, சுவாமிமலை, ஆதனூர், கூனஞ்சேரி, பட்டவர்த்தி வழியாக திருவைகாவூர் கிராமத்திற்கு தினசரி நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஒரு நகரப் பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் மாலை நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகள் கூட்டநெரிசலில் படிக்கட்டில் தொங்கி செல்கின்றனர். ஒரு சில மாணவர்கள் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணிப்படியில் தொங்கி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுவது எளிதாகிவிடும்.
அறியாப் பருவத்தில் உள்ள மாணவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வருகின்ற ஒரே ஒரு நகரப் பேருந்தில் அடித்துப்பிடித்து ஏறி செல்கின்றனர். இதனால் ஏற்படும் விபத்தை தவிர்க்க காலையும், மாலையும் பள்ளி நேரங்களில் மாணவ, மாணவிகள் செல்ல ஏதுவாக கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டால் மாணவ, மாணவிகள் ஒரே பேருந்தில் ஏறாமல் அடுத்தடுத்து பேருந்துகளில் சென்றால் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும். எனவே போர்க்கால அடிப்படையில் பள்ளி நேரங்களில் கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.