ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

Update: 2021-07-23 04:45 GMT

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையன்று ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்கள் நினைத்த காரியம் கைகூடும், மாங்கல்ய தோஷம் நீங்கும், திருமண தடைகள் விலகும், ஆயுள் விருத்தியாகும் என்பதால் சுமங்கலி பெண்கள் ஏராளமானோர் வழிபடுவர்.

அதனை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் உள்ள அம்மன் இருக்கும் அனைத்து கோயில்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு விளக்கேற்றி அம்பாளை தரிசனம் செய்ய விரதமிருப்பது வழக்கம்.

அதன்படி  ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ராகுகால காளியம்மன், ஆதிகும்பேஸ்வரர்கோயிலில் மங்களாம்பிகை அம்மன், நாகேஸ்வரன் கோயிலில்  காளியம்மன், காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில்  துர்க்கையம்மன், திருநல்லூரில் உள்ள காளியம்மன், திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர்கோயில் உள்ள அஷ்டபுஜ காளியம்மன், கொரநாட்டு கருப்பூரில் பெட்டிகாளியம்மன், கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் உள்ள துர்கையம்மன், உத்தாணி பொன்னியம்மன் உள்ளிட்ட பல கோயில்களிலும், கும்பகோணம் மடத்துத்தெரு படைவெட்டி மாரியம்மன், செட்டிமண்டபத்தில் உள்ள சுயம்பு மேற்கத்தியம்மன் உள்ளிட்ட பல அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள்நடைபெற்றன. 

காளி, துர்க்கையம்மன், அம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பெண்கள் நெய் தீபம் ஏற்றியும், விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். 

ஆடி வெள்ளியை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் அம்மன்,சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News