கும்பகோணத்தில் 10 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்; போலீசார் விசாரணை
கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் சாம்பலானது.
கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை, முகுந்தநல்லூர், கோட்டை சிவன் கோயிலில் குடிசை வீடுகள் உள்ளன. இங்கு 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் அங்குள்ள குடிசை வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது பலமான காற்று வீசியதால் அருகிலுள்ள குடிசை வீடுகளில் மள மள என தீ பரவியது. இதனால் சுமார் 10 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் தீயணைப்பு துறை வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் போராடி தீயை அணைத்தனர். இதனையடுத்து, டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண பொருட்கள் மற்றும் சொந்த நிதியை வழங்கினார்.
இந்த தீ விபத்தில், மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரேஷன் கார்டு சான்றிதழ்கள், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கோட்டை சிவன் கோவில் அருகில் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியில் உள்ள ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். இன்று காலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்த மூங்கில் மரத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். அப்போது மூங்கில் மரத்திலிருந்து பரவிய தீ அருகில் உள்ள குடிசை வீடுகளுக்கும் பரவியதால் ிந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினர்.