புதுச்சேரியில் மீட்கப்பட்ட 4 ஐம்பொன்சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைப்பு

புதுச்சேரியில் இருந்து மீட்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகளை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைக்க கும்பகோணத்துக்கு நேற்று கொண்டு வந்தனர்.;

Update: 2021-07-22 06:59 GMT

அரியலுார் மாவட்டம் குவாகம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2014ம் ஆண்டில் வழக்கு பதிந்து தேடப்பட்டு வரும் காணாமல் போன நடராஜர் ஐம்பொன் சிலை, புதுச்சேரி முத்தியால்பேட்டையில் இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து ஏடிஜிபி அபய்குமார்சிங் உத்தரவுப்படி, எஸ்பி பொன்னி அறிவுரைப்படி, திருச்சி ஏஎஸ்பி ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று புதுச்சேரி சென்று விசாரித்தனர்.

அப்போது முத்தியால்பேட்டை ராமச்சந்திரன் மகன் சுரேஷ் (47) வீட்டில் 4 ஐம்பொன் சுவாமி சிலைகள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மூன்றரை அடி உயரமுள்ள நடராஜர், முக்கால் அடி உயரமுள்ள நடராஜர், இரண்டரை அடி உயரமுள்ள சிவகாமி அம்மன், அரையடி உயரமுள்ள மற்றொரு அம்மன் என 4 உலோக சிலைகளை கைப்பற்றினர். பின்னர் இச்சிலைகளை கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை கொண்டு வந்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கைப்பற்றப்பட்ட 4 சிலைகளும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சிலைகளா, தொன்மையான ஐம்பொன் சிலைகளா, தமிழகத்தில் உள்ள ஏதேனும் கோயில்களில் இருந்து திருடப்பட்டதா என்பதை கண்டறிய விரிவான புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இந்நிலையில் 4 சிலைகளும் இன்று கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது என்றனர்.

Tags:    

Similar News