கும்பகோணம் பேருந்து நிலையத்தில் டாக்டரிடம் 30 பவுன் நகை அபேஸ்: ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் திருவாரூரை சேர்ந்த டாக்டரிடம் 30 பவுன் நகையை திருடிய ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (24). மருத்துவரான இவர், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வீட்டில் இருந்து நேற்று இரவு புறப்பட்டார். தனது மனைவி அபூர்வா மற்றும் தாயாருடன் கும்பகோணம் வழியாக செல்ல திட்டமிட்டார்.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த அண்ணாமலை தனது மனைவி மற்றும் தாயாருடன் வடலூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறினார். அப்போது தான் கொண்டு வந்திருந்த கைப்பையை பேருந்தில் உடைமைகளை வைக்கும் பகுதியில் வைத்திருந்தார்.
அந்த கைப்பையில் 30 பவுன் நகைகள் இருந்தன. இந்நிலையில், பேருந்து புறப்பட்டு கும்பகோணம் நால்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது மருத்துவர் அண்ணாமலை கைப்பையை எடுத்து பரிசோதித்து பார்த்தார். அதில் வைத்து இருந்த நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை மற்றும் குடும்பத்தினர் பேருந்து முழுவதும் கைப்பையை தேடினர். இதனால் பயணிகள் இடையே பரபரப்பு நிலவியது.ரறா
இதுதொடர்பாக மருத்துவர் அண்ணாமலை கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து காவல்துறையினர், உடனடியாக கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் ஆசமி ஒருவர் அண்ணாமலை சென்ற பேருந்தில் ஏறி கைப்பையை திருடிக்கொண்டு பின்பக்கமாக இறங்கி ஓடிச்செல்வது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து, திருட்டு சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்..