கும்பகோணம் அருகே பிள்ளையாம்பேட்டையில் வெறிநாய் கடித்து 13 நபர்கள் காயம்
கும்பகோணம் அருகே பிள்ளையாம்பேட்டையில் வெறிநாய் கடித்து காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்;
கும்பகோணம் அருகே பிள்ளையாம்பேட்டை அம்பேத்கர் நகரில் வெறிநாய் ஒன்று முதலில் ஜெயபாரதி என்பவரை கடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நாய் கடிப்பதை பார்த்து தடுக்க சென்றவர்களில் தொடர்ச்சியாக ராமதாஸ், அவரது மகன் மகேஸ்வரன் (6), ரேணுகா (30), பாங்கம்மாள் (60) உள்ளிட்ட 13 நபர்களை கன்னம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெறிநாய் கடித்துள்ளது. உடனடியாக ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டு 13 நபர்களை கடித்த வெறி நாயை அடித்துக்கொன்றனர்.
பின்னர், வெறிநாய் கடித்த 13 நபர்கள் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் மகேஸ்வரன், ரேணுகா, பாங்கம்மாள் ஆகிய மூவரும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் பிள்ளையாம்பேட்டை கிராமத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை உள்ளாட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.