கும்பகோணம் அருகே வாலிபர் கொலை: தந்தை, சகோதரர் கைது
கும்பகோணம் அருகே வாலிபர் கொலை தொடர்பாக தந்தை மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.;
கும்பகோணம் அருகே உள்ள விசலூர் மேல தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருக்கு சந்தோஷ்ராஜ்(22), பிருத்திவிராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் பிருத்திவிராஜ் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று சந்தோஷ்ராஜ் அப்பகுதியை சேர்ந்த ஒரு லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது தந்தை சவுந்தரராஜனும் மற்றும் பிருதிவிராஜனும் அங்கு சென்று சந்தோஷ்ராஜை அழைத்து சென்றனர்.
அப்போது சந்தோஷ்ராஜை அவரது தந்தை சவுந்தர்ராஜனும், பிருதிவிராஜூம் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சந்தோஷ்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாச்சியார்கோயில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சவுந்தர்ராஜன் மற்றும் அவரது மகன் பிருதிவிராஜன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.