மருத்துவர்களின் அலட்சியத்தால் அரசு பொது மருத்துவமனையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலாச்சேரி அன்னை கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு நடந்து சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட வாலிபரை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பிவைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சென்னை அருகில் உள்ள புழல் பகுதியைச் சேர்ந்தவர் பாலுமகேந்திரன் (29). இவர் புழல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு கொரானா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை செய்துள்ளார். இதனிடையே இவர் சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான மன்னார்குடிக்கு செல்வதற்காக லாரி மூலம் கும்பகோணம் வந்துள்ளார். அப்போது அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி என்ற இடத்திற்கு வந்துபோது புழல் பகுதியில் சுகாதாரப், பணியாளர்கள் இன்று காலை தொலைபேசி மூலம் பாலு மகேந்திரன் தொடர்பு கொண்டு உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் செல்பேசிக்கு குறுந்தகவல் ஒன்றையும் அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். தனக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், சிகிச்சை மையத்தில் சேருவதற்கான அனுமதி சீட்டை கொடுத்து , கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கல்லூரிக்கு செல்லும்படி கூறியுள்ளனர். அதற்கு அந்த இளைஞர் தனக்கு சிகிச்சை மையம் எங்கு இருக்கிறது என்று தெரியாது என்றும், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டு கொள்ளவில்லை,
இதனால் அன்னை கல்லூரி எங்கு இருக்கிறது என தெரியாத பாலு மகேந்திரன் விசாரித்து கொண்டே கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
முதுகில் பையை மாட்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் நடந்து செல்வதை பார்த்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறாய் என விசாரித்த போது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், அன்னை கல்லூரிக்கு செல்வதாகவும் தெரிவிக்கவே காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பாலுமகேந்திரா தடுத்து நிறுத்தப்பட்டார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் பாலுமகேந்திரனிடம் விசாரனை மேற்கொண்டார். பின்பு ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து வரவழைத்து அதன் மூலம் பாலுமகேந்திரா கோவிலாச்சேரியில் உள்ள கோவிட் சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆம்புலன்ஸ் வசதி கூட ஏற்படுத்தி தரமால், 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.