மாசி விழா உற்சவம் - பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா

Update: 2021-02-23 05:30 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சைவத்திருத்தலங்களிலும், அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

கும்பகோணத்தில் மகாமக திருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்களுக்கு மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறும், அதுபோல இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17ம் தேதி ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர் என ஆறு சைவத்தலங்களிலும் (ஏனைய ஆறு தலங்களில் ஏகதின உற்சவம்) 18ம் தேதி சக்ரபாணிசுவாமி, ஆதிவராகப்பெருமாள், இராஜகோபாலசுவாமி ஆகிய 3 வைணவ தலங்களிலும் (பிற இரு தலங்களில் ஏகதின உற்சவம்) கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமிகள் திருவீதியுலா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சைவத்தலங்களில் 5ம் நாளில், ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோவில், வியாழ சோமேஸ்வரசுவாமி திருக்கோவில் மற்றும் காசிவிஸ்வநாதசுவாமி ஆகிய மூன்று தலங்களில் இருந்தும் பஞ்சமூர்த்திகள், பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, நறுமண மலர்கள் மாலைகள் சூடி, அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் எழுந்தருள, திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது. மூன்று திருக்கோவில்களில் இருந்தும் வந்த ஓலை சப்பரங்கள் உச்சிப்பிள்ளையார் கோவில் சந்திப்பு அருகே சங்கமித்து பக்தர்களுக்கு ஒரே இடத்தில் இருந்து அருள்பாலித்தனர். இதனை காண ஏராளமானோர் திரண்டு வந்து தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News