கும்பகோணம்: தனி மாவட்டம் கோரி பேரணி

சட்டமன்றத்தில் வருவாய்த்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதிபடி, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி நகர முக்கிய வீதிகள் வழியே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கோரிக்கை முழக்க பேரணி, திருப்பனந்தாள் காசி திருமட அதிபர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

Update: 2021-02-21 09:22 GMT

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் 25 ஆண்டு கால கோரிக்கை. இன்றளவும் கோரிக்கையாகவே நீடிக்கிறது, இதற்கிடையில், கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்றத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அமைப்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என தெரிவித்தார்.

ஆண்டுகள் இரண்டு கடந்த போனது அதன்பின் பல புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்ட பின்பும், கும்பகோணம் மாவட்ட கோரிக்கை மட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இக் கோரிக்கையினை வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சியினர், வணிகர்கள், வழக்கறிஞர்கள், விவசாய சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொண்ட கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது இதன்படி, கடந்த 2020 ஜீலை 01ம் தேதி முதல் தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் இரண்டு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு, கோலமிடும் போராட்டம், மனிதசங்கிலி போராட்டம் என பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கும்பேஸ்வரன் மேல வீதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக கோரிக்கை முழங்கங்களை எழுப்பியபடி, பெருந்திரள் பேரணியாக சென்று பழைய மீன் அங்காடியில் நிறைவு செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் காவல்துறையினர் உச்சிபிள்ளையார் கோயில் சந்திப்புடன் பேரணியை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்புடன் நிறைவு செய்து கொள்ளப்பட்டது.

முன்னதாக இப்பேரணியை திருப்பனந்தாள் காசித்திருமட அதிபர் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் தொடங்கி வைத்தார், இப்பேரணியில், பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அமமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, வணிகர் சங்க பிரதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வழக்கறிஞர் சங்கத்தினர், சமூக நலசங்க பிரதிநிதிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News