ஐந்து வைணவ தலங்களில் மாசி மக கொடியேற்றம்

Update: 2021-02-18 11:15 GMT

மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு கும்பகோணம் சக்ரபாணிசுவாமி, ஆதிவராகப் பெருமாள், ராஜகோபால் சுவாமி உள்ளிட்ட ஐந்து திருக்கோவில்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டு தோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ ஸ்தலங்களுடன் இணைந்து ஒருசேர பத்து நாள் விழா நடைபெறும் மாசி மக பிரமோற்சம் மிகவும் விசேஷமானது. இந்த ஆண்டிற்கான மாசி மக பிரமோற்சவத்தின் துவக்கமாக நேற்று ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர் கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் காளஹஸ்தீஸ்வரர் என ஆறு சைவ திருத்தலங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

இதனையடுத்து, இன்று வைணவ ஸ்தலமான கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சக்ரபாணிசுவாமி, விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருளி, பட்டாசாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள,தாள மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, ஸ்ரீ பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற திருக்கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில் ஆகிய வைணவ தலங்களிலும் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News