சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,840, மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை ரூ.68,400, மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணியாளராகப் பணிபுரிந்து பணியின் போது,பா.அய்யனார் என்பவர் 25.04.2013 அன்று உயிரிழந்ததையொட்டி, அவரது வாரிசுதாரராகிய மனைவி அ.பார்வதி, திருப்புவனம் வட்டம், கொந்தகை கிராமத்தில் கிராம உதவியாளராக கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்ற 305 கோரிக்கை மனுக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது. மனுக்கள் மீது கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த.சௌந்தரராஜன், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.