சிவகங்கை அருகே மாணவ மாணவியருக்கான கோடைகால ஓவிய பயிற்சி: ஆட்சியர் தொடக்கம்

அரசுப்பள்ளியில் 75 மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 25 மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

Update: 2023-05-10 11:30 GMT

கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இலவச கோடைகால உண்டு உறைவிட ஒருவார ஓவியப்பயிற்சி முகாமினைமாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிகல்வித்துறை இணைந்து நடத்தும், இலவச கோடைகால உண்டு உறைவிட ஒருவார ஓவியப்பயிற்சி முகாமினை, மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து  பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஓவியக் கலையில் ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் திறமைகளை மேம்படுத்த இக்கோடைகால விடுமுறையினை பயனுள்ள விதத்தில் கழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் சிறந்த முன்னெடுப்பாக இலவச கோடைகால உண்டு உறைவிட ஒருவார ஓவியப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து இலவச கோடைகால உண்டு உறைவிட ஒருவார ஓவியப் பயிற்சி முகாமினை, 13.05.2023 வரை கீழக்கண்டனியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும், மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் 8 மற்றும் 9-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளில் ஓவியக்கலையில் ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இப்பயிற்சி வழங்கப்படுகின்றது. இதில், அரசுப்பள்ளிகளில் 75 மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 25 மாணவர்களும் என மொத்தம் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முகாமில், கலந்து கொள்ளும் மாணாக்கர்கள் சீருடை (3 செட்), கலர் உடை (3 செட்), மாற்று உடைகள் (6 நாட்களுக்கு தேவையானவை), போர்வை, துண்டு, சோப்பு, ஷாம்பு, சீப்பு, கண்ணாடி, எண்ணெய், பவுடர் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், தேவையான மருந்துப் பொருட்கள், மேலும், தங்குமிடம், உணவு மற்றும் கலைச்சுற்றுலா இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும், ஒருவார ஓவியப் பயிற்சி முகாமில், மாணாக்கர்கள் அனுபவமிக்க ஓவிய ஆசிரியர்களைக் கொண்டு, ஓவியங்கள் மற்றும் உலக ஓவியர்கள் பற்றிய அறிமுகம், நீர் வண்ண ஓவியங்கள், சுவர் ஓவியங்கள், பானை ஓவியங்கள், உயிர் ஓவியங்கள், உருவ ஓவியங்கள், கற்பனை நவீன ஓவியங்கள், சாக்பீஸ் ஆர்ட், போர்ட் ரைட் அக்ரலிக் ஆர்ட், களிமண் சிற்பம் செய்தல், காகித பொம்மை மற்றும் பூக்கள் செய்தல் போன்றவை கற்றுக் கொடுக்கப்படும்.

இப்பயிற்சியின் போது, மாணவர்கள் கலைச் சுற்றுலாவாக கீழடிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இப்பயிற்சி முகாமின் இறுதிநாளில் மாணவர்கள், வரைந்த ஓவியங்களைக் கொண்டு ஓவியக் கண்காட்சி நடைபெறும். ஓவியக்கலையில் ஆர்வமும் திறமையும் உள்ள மாணாக்கர்கள் இதுபோன்று நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, தங்களின் திறமைகளை வெளிக் கொணர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ப.சண்முகநாதன், உதவி திட்ட அலுவலர்கள் சீதாலெட்சுமி மற்றும் அ.பீட்டர் லெமாயூ மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News