சிவகங்கையில் மருதுபாண்டியர் நினைவு தின ஆலோசணைக் கூட்டம்..!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவு தினம் கொண்டாடுவதற்கான அரசு அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.

Update: 2024-10-19 13:07 GMT

மருதுபாண்டியர் நினைவு தின ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.

சிவகங்கை.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தின அரசுவிழா, காளையார் கோவிலில் நினைவு அனுசரிப்பு மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா ஆகிய நிகழ்வுகளின் போது,கடைப்பிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்த, கலந்தாலோசனைக்கூட்டம் ,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தின அரசுவிழா, காளையார்கோவிலில் நினைவு அனுசரிப்பு மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா ஆகிய நிகழ்வுகளின் போது, கடைப்பிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுதல் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு வருகின்ற 24.10.2024 அன்று திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச்சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி,கௌரவிக்கப்படவுள்ளது.இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களை சார்ந்த பொதுமக்களும் ஆகியோர் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்கள்.

அதேபோன்று, அக்டோபர் 27-ஆம் தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர்களின் நினைவு அனுசரிப்பு மற்றும் அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு, நமது மாவட்டத்திலிருந்து செல்லக்கூடிய பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், இந்நிகழ்வுகள் தொடர்பாக,எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் வராமல், அரசால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைக்களுக்குட்பட்டு, அதனை அனைவரும் முறையாக கடைபிடிப்பது தொடர்பாக, இன்றையதினம் கலந்தாலோசனைக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் எவ்வித இடையூறுமின்றி, நடைபெற்ற நிகழ்வைப் போல் இந்தாண்டும், எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக நடத்திட அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும். அதற்கென ,மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசால் வகுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகள் குறித்து, இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதில், சிவகங்கை, இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள விழாக்களில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதியில்லை. மேலும் சொந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் Own Board நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி செல்லலாம். நான்கு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள், அந்தந்தப் பகுதிகளுக்குட்பட்ட

மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரிடம், உரிய தகவல்களை கொடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரசு பேருந்துகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பயணம் மேற்கொள்வதற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் பயணம் மேற்கொள்பவர்களின் விபரங்கள் ஆகியவற்றை அந்தந்தப் பகுதிகளுக்குட்பட்ட மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளரிடம், கொடுத்து உரிய அனுமதி பெறவேண்டும். மேலும், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் இந்நிகழ்விற்கு செல்பவர்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பினை பேணிக்காக்கின்ற வகையில், வாகனங்களின் மேற்கூரையில் கண்டிப்பாக பயணம் மேற்கொள்ளக்கூடாது.

அவ்வாறு விதிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பயணங்களின் போது வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டிச்செல்லவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. போக்குவரத்து வழித்தடங்களில் இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. நடைப்பயணமாகச் சென்று அஞ்சலி செலுத்த அனுமதியில்லை.

குறிப்பாக, பொது இடங்களில் விளம்பரங்கள் செய்யக்கூடாது. தனிநபர் வீடுகள் மற்றும் காம்பவுண்டுகளில் சம்பந்தப்பட்ட நபரின் உரிய அனுமதி பெற்ற பின்னரே, விளம்பரம் செய்யலாம். அனுமதிக்கப்பட்ட வழிப்பாதைகளில் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக, கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கினை பராமரிப்பதற்கான மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அனைத்து சமுதாய அமைப்பினரும் முழு ஒத்துழைப்பினை அளித்து, கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும், அரசு வழிகாட்டுதலை பொதுமக்கள் முறையாக பின்பற்றி, சுதந்திரப் போராட்ட தியாகச் செம்மல்களை போற்றுவதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அனைத்து சமுதாய அமைப்பினரும் தங்களது கருத்துக்கள் குறித்து எடுத்துரைத்தனர்.சட்ட விதிகளுக்குட்பட்டிருப்பின், பரிசீலனை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவித்தார். இக்கூட்டத்தில், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ்,, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், சமுதாய அமைப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News