சிவகங்கையில் கிராம ஊராட்சித் தலைவர்களுக் கான ஆய்வுக் கூட்டம்
பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப் படுகிறது;
சிவகங்கையில், கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் சிவகங்கை நகராட்சியிலுள்ள தனியார் மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், கிராமப்புற வளர்ச்சியின் மேம்பாட்டிற்கென முக்கியத்துவம் அளித்து, அதில் தனிகவனம் செலுத்தி, அனைத்து திடடங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளையும் துரிதமாக மேற்கொள்வதற்கான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் அந்தந்தப் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களின் வாயிலாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் அதன் நிலை குறித்தும், கூடுதலாக மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்டத்திலுள்ள மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 445 கிராம ஊராட்சிகளைச் சார்ந்த அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்களுடன் 3 மாதத்திற்கு ஒருமுறை கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 14-வது நிதிக்குழு மானியத் திட்டம், 15-வது நிதிக்குழு மானியத் திட்டம், உபரிநிதித் திட்டம், ஆதிதிராவிடர் மானியம் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், நமக்கு நாமே திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம், நபார்டு-ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர, வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு, சாலை வசதி, மின் வசதி, சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல், ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளில் மேல் மூடியிடுதல், ரீ சார்ஜ் சாப்டாக மாற்றுதல் போன்ற மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாகவும் கலந்தாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
2021-2022-ஆம் நிதியாண்டில் மத்திய நிதிக்குழு மானியம், 14-வது நிதிக்குழு மானியம் மற்றும் உபரிநிதித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளில் மாவட்டத்தில் 12 ஊராட்சிகள் 100 சதவிகிதம் பணிகளை நிறைவு செய்துள்ளது. அவ்வூராட்சி மன்றத் தலைவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று மாவட்டத்திலுள்ள மொத்தம் 445 ஊராட்சிகளிலும் 100 சதவிகித பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். நிலுவை இல்லாமல் பணிகளை நிறைவு செய்தல் வேண்டும். அவை அடுத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக அமையும்.
மேலும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பள்ளிகள், நூலகங்கள், அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் ஆகியவைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், ஊராட்சிகளை மேம்படுத்துவதற்கு அடிப்படையான அரசின் திட்டங்கள் குறித்தும், ஊராட்சி மன்றத்தலைவர்கள் புரிதலுடன் இருத்தல் வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்த கையேட்டினை ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கும் துறைரீதியாக வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களை, பயனுள்ள வகையில் காலதாமதமின்றி செயல்படுத்தி, தங்களது ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அதில் தனிகவனம் செலுத்தி, தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கான சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதற்கு, பிற துறையுடன் ஒருங்கிணைத்து, அதற்கான சேவைகளை வழங்கிட வேண்டும். அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வண்ணம் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்தலைவர்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, முழு ஈடுபாடுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.ஆ.சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் அனைத்துமன்றத் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.