காரைக்குடியில் திருமணம் செய்து கொண்ட 2 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்
காரைக்குடியில் திருமணம் செய்து கொண்ட 2 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் போலீசாரிடம் தஞ்சமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திருமணம் செய்து கொண்ட 2 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் போலீசாரிடம் தஞ்சமடைந்தனர். மேலும் மற்றொரு காதல் ஜோடி திருமணம் செய்து வைக்க கோரி அடைக்கலமானது.
காரைக்குடி பனந்தோப்பைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் செல்வகுமார் (26). இவரும் இலுப்பக்குடி காந்திநகரைச் சேர்ந்த நந்தினியும் (19) மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவீட்டார் எதிர்ப்பால் இருவரும் குன்றக்குடியில் திருமணம் செய்து கொண்டனர். பிறகு தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காரைக்குடி மகளிர் போலீசாரிடம் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதேபோல் காரைக்குடியைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் சரண்குமார் (24), அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தரியா (24) ஆகிய இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் பிள்ளையார்பட்டியில் திருமணம் செய்து கொண்டனர். பிறகு தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காரைக்குடி வடக்கு போலீசாரிடம் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் சென்னையைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கும், சென்னையில் பணிபுரியும் சிவகங்கை அருகே மதகுபட்டியைச் சேர்ந்த இளைஞருக்கும் நேற்று மதகுபட்டியில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் மணப்பெண் சென்னையைச் சேர்ந்த தனது காதலனுடன் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி காரைக்குடி மகளிர் போலீசாரிடம் தஞ்சமடைந்தார்.
போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேசினர். ஆனால் காதலனின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், அவர் தனது காதலியை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதேபோல் அப்பெண்ணை திருமணம் செய்விருந்த மணமகனும் ஏற்கவில்லை. இதனால் அந்த பெண்ணை பெற்றோர் தங்களுடன் அழைத்துச் சென்றனர். ஒரே நாளில் மூன்று காதல் ஜோடிகள் போலீசாரிடம் தஞ்சமடைந்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.