சிவகங்கை மாவட்டத்தில் ரூ.16 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கையில் நடந்த மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன;

Update: 2022-12-20 02:30 GMT

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில்19 பயனாளிகளுக்கு ரூ.16.80 இலட்சம் மதிப்பீட்டிலானஅரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இதில்,  இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 414 மனுக்கள் பெறப்பட்டது.அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79,740 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பின்முனை வட்டி மானியத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.13,00,000 மதிப்பீட்டிலான மானியத் தொகைக்கான ஆணையினையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.3,00,000 மதிப்பீட்டிலான பல்வேறு கடனுதவிக்கான ஆணைகளையும் ஆக மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.16,79,740 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் , மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News