காரைக்குடி அரசு ஐடிஐ யில் புதிய தொழில்நுட்ப மையத்துக்கு அமைச்சர் அடிக்கல்
Government ITI College -காரைக்குடியில் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பில் தொழில்நுட்ப மையம் கட்டப்படவுள்ளது;
Government ITI College -காரைக்குடியில் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தொழில்நுட்ப மையம் 4.0 கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அமராவதி புதூர் ஊராட்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், காரைக்குடி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், கட்டப்படவுள்ள தொழில்நுட்ப மையம் 4.0 கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றஉ அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில், அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், தமிழகத்தின் நலன் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், எதிர்கால சந்ததியினர் தரமான கல்வியினை, தொழில்திறன் சார்ந்து பெற வேண்டும் என்ற அடிப்படையிலும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தொழில் சார்ந்த படிப்புகளில் தகுதியையும், திறமையையும் மேலை நாடுகளுக்கு இணையாக தரமான முறையில் வழங்க வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் புதிய பாடப்பிரிவுகளில் நவீன தொழில் நுட்பத்துடன் தொழிற் பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையம் 4.0 கட்டிடம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர், நடவடிக்கை மேற்கொண்டு, அதனை செயல்படுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில், தமிழகத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் மொத்தம் 71 மையங்கள் கட்டப்படுவதற்கு தலா ரூ.3.73 கோடி வீதம் மொத்தம் ரூ.264.83 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் நிறுவுவதற்கான நடவடிக்கையும், புதிதாக கட்டிடங்கள் மட்டுமல்லாமல் அதில் நவீன இயந்திரங்கள் வழங்குவதற்கென ஒரு மையத்திற்கு தலா ரூ.40.50 கோடி வீதம் மொத்தம் ரூ.2877.43 கோடி மதிப்பீட்டிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 71 மையங்களிலும் சீரான அடிப்படை மற்றும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையம் 4.0 இடம் நவீன தரத்திற்கு உயர் உற்பத்தி தொழில் நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
தொழிற்புரட்சி ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் நவீனமுறையில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, நாடு வளர்ச்சி பெற செய்வதற்கான வழிவகையும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மருத்துவப்படிப்பு, பொறியியல் படிப்பு போன்ற படிப்பினை தேர்ந்தெடுத்து தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்கிறார்கள். சராசரி மதிப்பெண் பெறும் மாணாக்கர்களும் சமுதாயத்தில் அங்கம் வகித்து, அவர்களை வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்வதற்கு தொழில் பயிற்சி நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ந்து வருகின்ற தொழிற்புரட்சியை ஈடு செய்வதற்கு ஏதுவாக மாணாக்கர்களை தயார் செய்து, அவர்கள் பயன்பெறும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, வேலைவாய்ப்பினை உருவாக்கிட தமிழ்நாடு முதலமைச்சர் வழிவகை செய்துயுள்ளார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில், தற்போது சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அரசினர் தொழில் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.இதில், தொழில்நுட்ப மையம் 4.0 கட்டிடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மானாமதுரை மற்றும் திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் விரைவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கிட அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
நவீன புதிய தொழில் நுட்பத்துடன் தொழில் சார்ந்த கல்வியை கற்பதற்கு மாணாக்கர்கள் வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு ஆகியவைகளுக்கு செல்வதை தவிர்த்து, அவர்கள் வசிக்கும் ஊரிலேயே புதிய நவீன தொழில் நுட்பத்துடன் பாடப்பிரிவுகளையும் ஏற்படுத்தி, அவர்கள் தரமான முறையில் பயில்வதற்கான வாய்ப்புகளும் தமிழ்நாடு முதலமைச்சர் , தலைமையிலான அரசின் பொற்கால ஆட்சியில் மாணாக்கர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை மாணாக்கர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, சிறப்பான பயிற்சியினை பெற்று, பொருளாதார ரீதியாக வீட்டிற்கும் நாட்டிற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என , ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார். உதவி செயற்பொறியாளர் ரமணன், காரைக்குடி அரசினர் தொழிற் பயிற்சி முதல்வர் எஸ்.குமரேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.எம்.கே.சொக்கலிங்கம், காரைக்குடி அரசினர் தொழிற் பயிற்சி அலுவலர் ஜெ.தீனதயாளன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2