சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட அறங்காவலர் குழு பதவி ஏற்பு
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நியமன ஆணையினை அமைச்சர் வழங்கினார்.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில், (29.05.2023), இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வைத்து, நியமனத்திற்கான ஆணையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், கருணாநிதி வழியில் தமிழகத்தில் நல்லாட்சியினை வழங்கி கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்துத்துறைகளின் சார்பில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அதில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து கோவில்களிலும் தேவையான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கென, அனைத்து மாவட்டத்திலும் அறங்காவலர் குழு ஒன்றை அமைத்து, அதன் வாயிலாக, சிறப்பான பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசால் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது
அதனடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா, இன்றையதினம் சிறப்பாக நடைபெறுகிறது. தாங்கள் வகிக்கும் பொறுப்புகளில் தனிகவனம் செலுத்தி, தங்களது துறைகளை மேம்படுத்துவதற்கான பொறுப்பு, ஒவ்வொருவரிடத்திலும்; இருத்தல் வேண்டும். இறைவனுக்கு தொண்டு செய்யும் மகத்தான பணியினை, இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ள நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
இதனை கருத்தில் கொண்டு, துறைரீதியாக உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒருமிக்க கருத்தோடு, புதிய திட்டச் செயல்முறைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துத்தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படும் அரசாக, தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. அதற்கு உறுதுணையாக இருந்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள அறங்காவலர் குழுவைச் சார்ந்தவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
மேலும், சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுவில் புதிதாக தலைவர் பதவியேற்றுள்ள புவனேஸ்வரி, உறுப்பினர்களாக பதவியேற்றுள்ள ஜெயமூர்த்தி, கரு.க.வெள்ளையன், கௌரி மற்றும் செல்வராஜ் ஆகியோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், தங்களின் பணி சிறப்பதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) நா.பழனிக்குமார், உதவி ஆணையர் வே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.