வட்டாட்சியர் அலுவலகத்தில் கவுன்டர் பற்றாக்குறை: சான்றிதழ்கள் பெற மக்கள் அவதி
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் சான்றிதழ்கள் பெற போதிய கவுண்டர் வசதி இல்லாததால் பயனாளிகள் அவதி.;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா நகல், உட்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற வந்து செல்கின்றனர். ஆனால், பயனாளிகளின் வருகைக்கு ஏற்றவாறு சான்றிதழ் வழங்க போதிய கவுண்டர்கள், கணினி ஆபரேட்டர்கள் இல்லாததால், பயனாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சான்றிதழை பெறும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.
கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் போதிய வசதிகள் இல்லாததால் உட்காரக் கூட இடமின்றி அல்லல்பட்டு வரும் நிலையில், காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெற வரும் பயனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரனிடம் கேட்டபோது, பயனாளிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.