காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
Kannadasan Birthday Celebration in Karaikudi Ministers Respect;
கவியரசு கண்ணதாசன் அவர்களின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.
நிகழ்வில், பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவிக்கையில், கவியரசு கண்ணதாசன், கலை மற்றும் சினிமாத்துறையில் மிகுந்த பற்றுதல் கொண்டு சிறப்பாக செயல்பட்டதனால் அனைவராலும் போற்றப்பட்டவர். மேலும், அரசியலில் கால் பதித்து, பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டவர். அவர்களின் புகழை பறைசாற்றுகின்ற வகையில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் அன்னாரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் நோக்கில், அன்னாரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இந்தாண்டு கவியரசு கண்ணதாசன் அவர்களின் 96-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும், கவியரசு கண்ணதாசன் அவர்களை கௌரவப்படுத்திடும் வகையில், டாக்டர்.கலைஞர், கவியரசு கண்ணதாசன் பிறந்த மாவட்டமான, சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியில் தமிழக அரசின் சார்பில் அன்னாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் ஏதுவாக, இம்மணி மண்டபத்தில் நூலகம் அமைக்கப்பட்டு, இது தவிர திறமை வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு, இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக பயிற்சி வகுப்புக்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இம்மண்டபத்தில் நடத்தப்படுவது கவியரசருக்கு மேலும் சேர்க்கிறது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, நகர்மன்ற துணைத் தலைவர் குணசேகரன், கவியரசு கண்ணதாசன் புதல்வி விசாலாட்சி கண்ணதாசன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சி.பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலவலர் அ.கொ.நாகராஜபூபதி, வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.