காரைக்குடி அருகே உணவுக் கண்காட்சி: ஆட்சியர் தொடக்கம்
செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மரபியல் பன்முகத்தன்மை கண்காட்சி நடைபெறுகிறது.
உலக உணவு தினத்தினை முன்னிட்டு,உயர்தர உள்ளுர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சியினைமாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,தொடங்கி வைத்தார்.
உலக உணவு தினத்தினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், செட்டிநாட்டில் உள்ள உயர்தர உள்ளுர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து தெரிவிக்கையில்:
சிவகங்கை மாவட்டத்தில் ,பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரிய மிக்க பல்வேறு சிறப்பு மிக்க பண்புகளைக் கொண்ட பயிர் இரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுள் பல இரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளது.பாரம்பரிய மிக்க உள்ளுர் இரகங்கள் மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் இரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
நமது தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தனி நிதிநிலை அறிக்கையில், இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரிய மிக்க உள்ளுர் பயிர் இரகங்களை கண்டறிந்து, பகுதிக்கேற்ற சிறந்த மேம்பாட்டு இரகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாவட்டந்தோறும் இது குறித்த கண்காட்சிகள் வருடத்திற்கு 3 முறை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றையதினம் உலக உணவு தினத்தினை முன்னிட்டு, செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் மரபியல் பன்முகத்தன்மை கண்காட்சி நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய மிக்க உள்ளுர் இரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழக பயிர்களை காட்சிப்படுத்துதல் விவசாய விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா, மரபியல் பன்முகத்தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
அதன்பொருட்டு , அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதியில் விளையும் சிறந்த பண்புகளைக் கொண்ட பாரம்பரிய மிக்க உள்ளுர் உயர்ரகங்களை காட்சிப் பொருளாக வழங்கிய கண்காட்சியில் பங்கு கொண்டு, இதில் இடம் பெற்றுள்ள வேளாண் சார்ந்த உற்பத்திப் பொருட்களை அறிந்து கொண்டு, இது குறித்து கூடுதல் விவரங்கள் தேவைப்படின், துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு, விவசாயிகள் தங்களது உணவு உற்பத்தியைப் பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து, 3 விவசாயிகளுக்கு உயிர்உரம், நுண்ணுரம், நெல்விதை போன்றவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை)(பொ) தனபாலன், துணை இயக்குநர்கள் (தோட்டக்கலைத்துறை) அழகுமலை,கதிரேசன் (வேளாண்மை), பன்னீர்செல்வம் (மாநிலத் திட்டம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா, செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதன்மை அலுவலர் முனைவர்.வீரமணி, காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.