சேலத்தில் தாத்தாவை கொல்ல முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
சேலத்தில் திருமணம் செய்து வைக்க கோரி தாத்தாவை கொல்ல முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள இழுப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (23) என்பவர், தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அவரது தாத்தாவின் வீட்டிற்கு தீ வைத்ததோடு, தாத்தா கலியன் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதுதொடர்பாக வீரகனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, தாத்தாவை கொலை செய்ய முயன்ற கண்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2500 ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.