மாயமான பள்ளி மாணவியை 3 மாதமாகியும் கண்டுபிடிக்கவில்லை: போலீஸ் ஸ்டேஷன் முன்பு உறவினர்கள் தர்ணா
சேலத்தில், காணாமல் போன பள்ளி மாணவியை 3 மாதமாகியும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி, சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கு, 18 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும், சேலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 15ம் தேதி பள்ளிக்கு சென்ற இளைய மகள் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மாணவியை கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளனர். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். பள்ளி மாணவியை கடத்திச் சென்ற முருகேசனுக்கு, ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மூன்று மாதமாகியும் மாணவி மீட்க படாததால் ஆவேசமடைந்த பெற்றோர், உறவினர்களுடன், சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மாணவி கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்த பெற்றோர், காவல்நிலையம் முன்பே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்வதாகக் கூரினர்.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து பூச்சி மருந்தை போலீசார் கைப்பற்றி, மாணவியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்; தர்ணாவில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.