ஆர்.எஸ் மங்கலம் அருகே இடி தாக்கி பெண் உயிரிழப்பு
ஆர்.எஸ் மங்கலம் அருகே இடி தாக்கி பெண் உயிரிழப்பு. சோகத்தில் மூழ்கிய கிராமம்.;
இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஒன்றியம் மேலச்சித்தூர்வாடி கிராமத்தைச் சேர்ந்த பாலு மனைவி மார்க்ரேட் மேரி (45).இவர் வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மழையின் போது இடி மின்னல் தாக்கியதில் மார்க்ரேட் மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மார்க்ரேட் மேரியின் கணவர் பாலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மூத்த மகள் பௌலின்ரோஷி (24) வுக்கு இன்னும் சில தினங்களில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், ஏற்கனவே தந்தை இல்லாத நிலையில் தாய் திடீரென இடி மின்னல் தாக்கி உயிரிழந்த நிலையில் செய்வதறியாமல் இரு பெண் பிள்ளைகள் தவித்து வருவது, இக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டாட்சியர் முருகவேல் மற்றும் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.