இராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் ரவுடிக்கு அரிவாள் வெட்டு
இராமநாதபுரம் நீதிமன்றத்திற்குள் ரவுடி அரிவாளால் வெட்டப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது
இராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் ரவுடி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார்(28) இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீதிமன்ற நிபந்தனையுடன் பரோலில் வெளியில் வந்தவர் இன்று நிபந்தனை கையெழுத்து இடுவதற்காக, இராமநாதபுரம் ஜே.எம் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அங்கு மறைந்திருந்த ஆர்.எஸ் மடையைச் சேர்ந்த கொக்கி குமார் தலைமையிலான கும்பல் (இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது) அசோக்குமாரை கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் பலத்த காயம் அடைந்த அவர் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இராமநாதபுரம் நீதிமன்றத்திற்குள்ளேயே ரவுடி ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்த மற்றொரு ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியில் 4 பேர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் உட்பட சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் நடந்த தொடர் பழிவாங்கும் மற்றும் ரவுடி கொலைகளை அடுத்து, தமிழக போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடவடிக்கையில் 450 சமூக விரோதிகளை கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து டிஜிபி சி சைலேந்திர பாபு அதிகாரிகளுக்கு புயல் நடவடிக்கையை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து செயலில் உள்ள குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
மாநிலம் தழுவிய சோதனையின் போது, குறைந்தது 870 ரவுடி களை போலீசார் விசாரித்தனர். 450 பேரைத் தவிர, மேலும் 181 பேர் பிணையில் வெளிவர முடியாத வாரண்டுகள் நிலுவையில் இருந்ததற்காக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 அரிவாள்கள், கத்திகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் பெண் உள்பட 100 ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். நகரம் மற்றும் மாநிலத்தில் மீண்டும் தலைதூக்கும் சமூகவிரோதிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பதே இந்த சோதனையின் நோக்கம் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.தென் மாவட்டங்களில் 174 பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 201 பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெற்கு மண்டல ஐஜிபி தெரிவித்தார்.