வங்கி மேலாளர் போல் பேசி பெண்ணிடம் 1 லட்சம் ரூபாய் மோசடி

ஆர்.எஸ்.மங்கலத்தில் வங்கி மேலாளர் போல் பேசி பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-01-01 07:31 GMT

வங்கிக் கிளை (மாதிரி படம்)

ஆர்.எஸ்.மங்கலத்தில் வங்கி மேலாளர் போல் பேசி பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை  போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் போல போனில் பேசி மர்ம நபர் ஒருவர் ரூ. 1 லட்சம் மோசடி செய்துள்ளார். நகைக்கடனுக்கு தற்போது 30 சதவிகிதம் தள்ளுபடி எனக்கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர் தலை மறைவாகியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அடுத்த செட்டியமடை கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தி (37).  இவரது கணவர் மாரி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வசந்தி ஆர்.எஸ் மங்கலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகையை ரூ. 95 ஆயிரத்திற்கு அடகு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடகு வைத்த நகையை திருப்புவதற்காக ஆர்.எஸ் மங்கலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேற்று வந்துள்ளார்.

அப்போது வங்கியின் உள்ளே இருந்த ஒரு நபர் தனது பெயர் குமார் என்றும் தான் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருவதாக கூறி அறிமுகமாகியுள்ளார். மேலும்,தற்போது ஒரு திட்டத்தின் கீழ் நகையை மீட்க 30 சதவீதம் வரை நகைக்கடன் தள்ளுபடியாகும். எனவே, 1 லட்ச ரூபாய் நகைக்கடனுக்கு 70 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும் எனக்கூறியதாக சொல்லப்படுகிறது.மேலும், வசந்தியின் செல்போன் எண்ணையும் வாங்கிய மர்ம நபர் இன்று காலையில் 10 மணிக்கு வசந்தியின் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி திறந்துவிட்டதாகவும், வங்கியில் தன்னை வந்து சந்தித்துவிட்டு நகையை திருப்ப வருமாறு கூறியுள்ளார். இதனை நம்பி வங்கிக்கு வந்த வசந்தி வங்கியின் உள்ளே அந்த நபர் இருப்பதையும் கண்டு அவரை சந்தித்துள்ளார்.

வசந்தி வந்ததும் நகை அடமான சீட்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பணம் ஆகியவற்றை வசந்தியிடம் இருந்து வாங்கி கொண்டு நகைக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தள்ளுபடி உள்ளதாகவும் அதற்குறிய படிவம் பக்கத்தில் உள்ள ஜெராக்ஸ் கடையில் இருப்பதாகவும், அதனை வாங்கி வரும்படி வசந்தியிடம் கூறியுள்ளார். அவருடைய பேச்சை நம்பி பணத்தைக் கொடுத்த வசந்தி ஜெராக்ஸ் கடைக்கு சென்று திரும்புவதற்குள் மர்மநபர் பணத்துடன் தலைமறைவானார். இதனால் அந்த வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து வசந்தி புகார் அளித்ததை தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் காவல் ஆய்வாளர் தேவி தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கொண்டு வழக்கு பதிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News