தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்
தெருவில் பல நாட்களாக தேங்கிய பாதாள சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
இராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் ஒரு பகுதியில் பாதாள சாக்கடை நீர் வெளியேறி அந்த பகுதி முழுவதும் தேங்கி நிற்பதால், தொற்றுநோய்கள் உருவாகி வருவதாகவும் பலமுறை நகராட்சியிடம் மனு அளித்தும் அதை அகற்றவில்லை எனக்கூறி அந்த பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்
இதனால் அந்த பகுதி ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நகராட்சி கழிவுநீர் அகற்றும் வாகனம் மூலம் அந்த நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இதே பகுதியில் ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் பகுதி மக்கள் கூறும் போது இந்த நீரானது பல நாட்களாக தேங்கி நிற்பதாகவும் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு பலனும் இல்லை எனவும் இதற்கு நிரந்தரமான ஒரு தீர்வு எட்ட வேண்டும் எனவும் கூறினர்.