அகதிகள் போர்வையில் தமிழகம் வந்த 2 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

இராமநாதபுரம் மாவட்டம், புதுக்குடியில், அகதிகள் போர்வையில் வந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போலீசில் சிக்கினர்.

Update: 2022-04-28 23:45 GMT

கைதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக,  உயிர் வாழ முடியாமல் தமிழகத்திற்கு அகதிகளாக, தமிழர்கள் வருகின்றனர். அவ்வகையில் நேற்று காலை தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதிக்கு வந்த இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், இலங்கையில் போதைப்பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால் யாழ்ப்பாணத்தில் இருந்து படகை திருடி கொண்டு தமிழகத்திற்கு தப்பி வந்தது தெரியவந்துள்ளது.

விசாரணையில் அவர்கள் இருவரும், யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியை சேர்ந்த சீலன் மற்றும் அருள்ராஜ் என்பது தெரிய வந்தது.  இருவரிடம், நேற்று காலை முதல் மத்திய, மாநில உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு,  இவர்கள் இருவர் குறித்து தகவல் சேகரித்தனர். அப்போது இவர்கள் இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும்,  யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இருவர் மீதும்,  சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடவுச்சீட்டு இன்றி ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்து, சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடுகளை பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை தமிழர்கள் இருவர் மீதும்,  தேவிபட்டினம் மரைன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News