இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காத்தன் குண்டு கருவேல பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி கிழக்குக் கடற்கரைச் சாலையில் டாஸ்மாக்கடை உள்ளது. இதனருகே காத்தன்குண்டு ஊரணி உள்ளது. அதில் முட்கள் நிறைந்து உள்ள பகுதியில் அழுகிய நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற திருவாடானை டிஎஸ்பி., ராமகிருஷ்ணன் தொண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தனிப்பிரிவு எஸ்ஐ., முருகானந்தம், எஸ்ஐ, சித்தன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அச்சடலத்தை கண்டவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் இறந்தவரின் அடையாளம் தெரிந்தது.
அவர் தொண்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராஜா (50) என்பதும் இவருக்கு சபரி மற்றும் ரித்தீஷ் என இரு மகன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் இவரது மனைவி தேவிக்கும் கடந்த சில தினங்களாக மனவருத்தம் ஏற்பட்டதாகவும் இதனால் மனமுடைந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அவரை தேடி வந்ததாகவும் அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
மேலும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் யாரேனும் இவரைத் தாக்கி கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து தொண்டி போலீசார் வழக்கு பதிந்து சடலத்தை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.