ஊட்டியில் குழந்தை திருமண ஏற்பாட்டில் ஈடுபட்ட மூவர் கைது
ஊட்டியில் குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு காலத்தில், குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன. நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல், ஜூன் மாதம் வரை, ஐந்து குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர், உறவினர்கள் என, 40 பேர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊட்டியில், கடந்த இரண்டு நாட்களில் புதுமந்து, வால்சம் ரோடு, எல்க்ஹில் ஆகிய பகுதிகளில், குழந்தை திருமணம் நடப்பது குறித்து, ஊட்டி சைல்டு லைன்னுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. பின், அனைத்து மகளிர் போலீசார் உதவியுடன், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
குழந்தை திருமணத்திற்கான ஏற்பாட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, குழந்தைகள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.