கோடநாடு வழக்கு: காலை முதல் இரவு வரை நீடித்த விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 ம் நபரிடம் மாவட்ட எஸ்பி, ஏடிஎஸ்பி ஆகியோர் 8 மணி நேரம் விசாரணை.;
கடந்த சில நாட்களாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 ம் நபராக உள்ள ஜம்ஷீர் அலியிடம் நேற்று 8 மணி நேரம் மாவட்ட எஸ்.பி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுத்தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நாள்தோறும் உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் முதல் நபராக சயான் மட்டும் விசாரிக்கப்பட்டிருந்தார். இரண்டாவதாக இவ்வழக்கில் நான்காம் நபராக உள்ள ஜம்ஷீர் அலி, கேரளாவிலிருந்து வந்து விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மாவட்ட எஸ்.பி ஆஷிஸ்ராவத் தலைமையில் தனிப்படை போலீசார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.